முன்னைய அரசாங்கங்களின் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி கூறியுள்ளார்.
அத்தோடு பல்வேறு காலங்களில் இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள், தந்தையர், மகன்கள், உறவினர்கள் என அனைவரும் ஒன்றுகூடி நமது நாட்டின் அரச சொத்து, அரச வளங்கள் மற்றும் அரச நிதியை பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்து கையகப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் அவற்றைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். சட்டவிரோதமாகவோ அல்லது முறையற்றதாகவோ கையகப்படுத்திய எவருடைய சொத்தையும், சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் மீட்டெடுக்க அரசாங்கத்திற்கு உதவும் புதிய சட்ட ஏற்பாடுகளுக்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வரவுள்ளது.
நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நாளுக்கு நாள் நிறைவேற்றி வருகிறோம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையையும் எந்தவித சலசலப்பும் இல்லாமல் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.