NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சத்திரசிகிச்சையின் பின்னர் மயங்கிய நிலையில் 9 வயது சிறுவன்!

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் மயங்கிய நிலையில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

தமது மகனின் மரணத்திற்கு மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அங்குருவத்தோட்ட பெத்திகமுவ ஹல்தொட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு மயக்க நிலையில் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சத்திரசிகிச்சைக்குப் பின்னரும் சிறுவன் சுயநினைவு பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில், மிரிஹான பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share:

Related Articles