பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கப்பல்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஒரு மாதத்துக்கும் மேலாக சரக்குகளுடன் கப்பல்கள் நடுக்கடலில் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தின் தன்மையை மாற்றியமைத்து எளிமையாக்கிய இரண்டு திட்டங்களாக சூயஸ் கால்வாயும் மற்றும் பனாமா கால்வாயும் திகழ்கிறது.
அத்திலாந்திக் சமுத்திரத்தினையும், பசுபிக் சமுத்திரத்தினையும் இணைத்து தென் அமெரிக்காவை சுற்றிச் செல்லும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக பனாமா நாட்டிலுள்ள காடன் ஏரியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாயே பனாமா கால்வாய் ஆகும்.
கடல் மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் உள்ள இந்த கால்வாயின் ஊடாக கப்பல் செல்ல வேண்டுமாக இருந்தால் அது கடல் மட்டத்திலிருந்து 85 அடிக்கு நீர்ப்பூட்டு சாதனம் ஒன்றின் மூலம் உயர்த்தப்படுகிறது.
பின்னர் ஏரியிலிருந்து வரும் நீரின் மூலம் இந்த நீர்ப்பூட்டு இயங்கி, கப்பல்களை உயர்த்தி காடன் ஏரியைக் கடந்த பிறகு கடலில் சமநிலையில் இறக்கிவிடும், இந்த பயணத்தின் போது இந்த கால்வாயில் 5 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கப்பலின் வகை, சரக்கின் வகை, சரக்கின் எடையைப் பொருத்துக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுவே பனாமா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியடித்துவம் வாய்ந்த வருமானமாக திகழ்கிறது.
மேலும், இந்தக் கால்வாயின் வழியாக நாளொன்றுக்கு 38 கப்பல்களும், ஆண்டுக்கு 14,000 சரக்குக் கப்பல்களும் செல்கிறது.
உலகப்பொருளாதாரத்தின் முக்கியப்புள்ளியாக விளங்கும் இந்த பனாமா கால்வாயில் தற்போது புதிய பிரச்சினை உருவாகியுள்ளது இதனால் சர்வதேச பொருளாதாரமே பாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு (2023) பனாமா நாட்டில் மழைவீழ்ச்சி 30 சதவீதம் குறைவாக கிடைத்துள்ளது, இதனால் அந்தப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது, இதனால் பனாமா கால்வாயில் நீரின் அளவும் குறைந்துள்ளது.