அவதூறு மற்றும் கஞ்சா வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரின் பிணை கோரிய மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக பொலிஸார் மற்றும் பெண் பொலிஸார் தொடர்பில் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், அவர் பயணித்த காரில் இருந்து கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டிருந்தது. மேலும், சவுக்க சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கஞ்சா வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் பிணை கோரிய மனு மீண்டும் ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றில் சவுக்கு சங்கர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கால அவகாசம் கோரியதால் பிணை கோரிய மனு மீதான விசாரணையை நீதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே, சவுக்கு சங்கருக்கு பிணை வழங்கக் கூடாது எனக் கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.