NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சவூதி அரேபியாவுக்கு பணிக்காக சென்றிருந்த பெண் உயிரிழப்பு!

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக சென்றிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

26 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணிப்பெண்ணாக இவர் வெளிநாடு சென்றுள்ளார்.

வெளிநாட்டில் சில நாட்கள் கழித்து தனது உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி தான் வேலை செய்யும் வீட்டில் சாரதி பிரச்சினை செய்வதாக கூறியுள்ளார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை தொலைபேசியில் அழைப்பதாகவும் வீட்டில் வேலை அதிகம் எனவும் அதிக நேரம் பேச முடியாது எனவும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் தங்கிய முதல் மாதத்தில் 78,000 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும், சில மாதங்களுக்குப் பிறகு அது குறைக்கப்பட்டதாகவும், இரண்டாவது மாதத்தில் 53,000 மற்றும் பின்னர் 20,000 கடந்த மாதம் 10,000 ஆக குறைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி தனது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்த நிலையில், அதன் பின்னரும் அவருக்கு அழைப்பு வராததால், உறவினர்கள் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவித்துள்ளனர்.

அங்கு, ஒரு வாரத்திற்கு முன்பு எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles