(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டில் சிகரெட்டுகளுக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அடிமையாதல் அதிகரித்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சுவாச நோய் தொடர்பான நிபுணர் வைத்தியர் வத்சலா குணசிங்க தெரிவித்துள்ளார்.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிகரெட் பாவனையால் இந்நாட்டில் நாளாந்தம் 55 மரணங்கள் வரை ஏற்படுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சிகரெட் பாவனையால் வருடத்திற்கு 20,000 அகால மரணங்கள் ஏற்படுவதாக அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மக்கள் நாளாந்தம் 400 மில்லியன் ரூபாவை சிகரெட்டுக்காக செலவிடுகின்றனர்.
இலங்கையில் புகைப்பிடிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என அந்த நிலையம் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.