(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள திரிபுரேஷ்வர் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (22) ஆரம்பமான மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வி கண்டுள்ளது.
இலங்கை அணி தனது ஆரம்பப் போட்டியில் 3 நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
முதல் 2 செட்களில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி முன்னிலையில் இருந்த இலங்கை அணி, சில தவறுகள் காரணமாக தோல்வி அடைந்தது.
முதல் செட்டின் ஆரம்பத்தில் 6 – 1 என முன்னிலையில் இருந்த இலங்கை, அடுத்த 5 புள்ளிகளை இழந்ததால் போட்டி 6 – 6 என சமமானது. எனினும், மீண்டும் திறமையாக விளையாடிய இலங்கை 14 – 9 என முன்னிலை அடைந்தது.
அதனைத் தொடர்ந்து 2 அணிகளும் கடுமையாக மோதிக்கொள்ள ஆட்டம் 25 – 25 என சமநிலை அடைந்தது. இதனை அடுத்து சமநிலை முறிப்பு முறையில் 27 – 25 என உஸ்பெகிஸ்தான் வெற்றிபெற்றது.
இரண்டாவது செட்டிலும் இலங்கை அணி இரு சந்தர்ப்பங்களில் முன்னிலை அடைந்த போதிலும், தவறுகள் இழைத்மையால் 20 – 25 என தோல்வியடைந்தது.
கடைசி செட்டில் உஸ்பெகிஸ்தானின் திறமைக்கும் வியூகங்களுக்கும் ஈடுகொடுக்க முடியாத இலங்கை அணி 14 – 25 என தோல்வி அடைந்தது. இலங்கை தனது 2ஆவது போட்டியில் கஸக்ஸ்தானை இன்று (23) எதிர்கொள்கிறது.