ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது சீன பயணத்தில் முன்வைக்கும் ஒரு திட்டத்தை முழுமையாக செய்துக்கொடுக்க சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் சீன பயணம் தொடர்பிலான திட்டங்களை வகுக்கும் நோக்கில் இலங்கை வந்திருந்த சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பிரதித் தலைவர் கின் போயோங், சீன ஜனாதிபதியின் இந்த செய்தியை அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 15ஆம் திகதிமுதல் 17ஆம் திகதிவரை இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி இந்தியா சென்றிருந்த தருணத்தில் கின் போயோங் இலங்கை வந்திருந்ததுடன், அரசாங்கத்தின் முக்கிய தரப்பினருடன் பேச்சுகளில் ஈடுபட்டிருந்தார்.
கின் தலைமையிலான குழு ஜே.வி.பி தலைமையகத்திற்கும் சென்று கலந்துரையாடல்களின் ஈடுபட்டிருந்தது. இதுகுறித்து ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.
ஜனாதிபதி இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும், கின் தலைமையிலான சீனக் குழுவினர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தனர். அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் விசேட செய்தியொன்றையும் கின் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜனாதிபதி தமது சீன பயணத்தின் போது விரும்பும் எந்தவொரு புதிய திட்டத்தையும் முன்வைக்க முடியும் எனவும், அதனை நடைமுறைப்படுத்த சீன அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறியுள்ளார்.
இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும் பெற்றுக் கொள்ளாத தனித்துவமான இந்த யோசனையை சீனா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் முன்வைத்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சீன பயணத்தின் போது முன்வைக்கப்படவுள்ள திட்ட முன்மொழிவு தொடர்பில் அரசாங்கத்திற்குள் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையில் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ள மத்திய அதிவேக வீதியின் எஞ்சிய பகுதியை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் சீன பயணத்தில் போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரிவுக்குப் பொறுப்பான சீன நிறுவனத்துக்கு அரசு பெருமளவு இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதால் அந்தப் பணி முடங்கியுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் சீனாவிடமிருந்து அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளதாகவும் இதன்மூலம் இழப்பீட்டுத் தொகையை முற்றாக இடைநிறுத்த அல்லது இழப்பீட்டுத் தொகையை கணிசமான அளவு குறைத்து கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் எஞ்சிய பகுதியை நிர்மாணிப்பதற்கு சீனா இணங்கியுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், பொருளாதார நெருக்கடி காரணமாக கைவிடப்பட்ட கண்டி வரையிலான மத்திய அதிவேக பாதையின் முழுப் பகுதியையும் நிர்மாணிப்பது குறித்தும் சீனா அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது. ஜனாதிபதியின் சீன பயணத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் தொடர்பில் சாதகமான பதில் சீனாவிடமிருந்து கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் சீனாவின் திட்டம், ஹம்பாந்தோட்டையில் கைத்தொழில் வலயத்தை நிறுவுவதற்கான சீனா முன்மொழிந்துள்ள திட்டம் குறித்தும் இந்தப் பயணத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சீனாவுடன் இலங்கைக்கு ஏற்பட்டுவரும் நெருக்கம் தொடர்பில் இந்தியா தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் சீன பயணம் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்துள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.