NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீரற்ற காலநிலை காரணமாக 143,726 பேர் பாதிப்பு..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 53,888 குடும்பங்களைச் சேர்ந்த 143,726 பேர் இன்னும் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

அதன்படி 45,418 குடும்பங்களைச் சேர்ந்த 116,209 பேர் உறவினர் வீடுகளிலும், 8470 குடும்பங்களைச் சேர்ந்த 27,517 பேர் 229 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 103 வீடுகள் முழுமையாகவும் 2635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இதுவரை 24 மாவட்டங்களில் 142,624 குடும்பங்களைச் சேர்ந்த 479,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல மாகாணங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டன.

கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, பேராறு, உல்ஹிட்டிய ரத்கிந்த, பொல்கொல்ல, நாச்சதுவ, ராஜாங்கனை, கலாவெவ மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன் , மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் சில நாட்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியானது தற்போது இலகு ரக வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஹாலிஎல உடுவர மேல்பகுதியில் விழுந்த மண் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், பதுளை மற்றும் எல்லயிக்கு இடையே ரயில் சேவையை இயக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலா ஓயா, மல்வத்து ஓயா, ஹெட ஓயா, தெதுருஓயா, மஹாவலி கங்கை மற்றும் முந்தேனி ஆற்றுப்படுகை ஆகியவற்றுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய அறிவிப்புகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக, 9 மாவட்டங்களில் உள்ள 72 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles