பெறுமதி சேர் வரி அதிகரிப்புடன் மதுபானத்தின் விலையும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் என ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் எரந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வரித் திருத்தத்திற்கு அமைய பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் மீது 18 வீத பெறுமதி சேர் வரி விதிக்கப்படவுள்ளது.
எரிவாயு, எரிபொருள், சூரிய சக்தி மின்னுற்பத்தி இயந்திரம், மருத்துவ தொழில்நுட்ப உபகரணம், மருந்து உற்பத்தி இயந்திரம், கையடக்கத் தொலைபேசி, இரசாயன உரம் உள்ளிட்ட 95 வகையான பொருட்கள் இந்த வரி விதிப்புக்குள் அடங்குகின்றன.
இந்த நிலையில், எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியமான பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை ஈக்குவது தொடரில் நிதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
குறித்த பொருட்களை பெறுமதி சேர் வரிக்குள் உற்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார். இருப்பினும், விசேட சரக்கு வரிக்கு உட்பட்ட 65 வகையான பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி வசூலிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கந்துகொண்டு கருத்துரைத்த மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜனக எதிரிசிங்க, வெட் வரி திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.