NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தயார் – வாக்கு பெட்டிகளும் இன்று விநியோகம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 1,204 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி பிரசன்ன கினிகே தெரிவித்தார்.

இதனிடையே, நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக சிக்கல்கள் இருந்தாலும், அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் உரிய முறையில் தயார்படுத்தப்பட்டு வருவதாக கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்காக அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்துள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெகத் சந்திரலால் தெரிவித்தார்.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றும் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், உத்தியோகபூர் வாக்காளர் அட்டைகள் இன்றியும் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். எல். ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது.

அதன்படி, வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அத்தோடு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles