NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி பொய்யுரைத்ததாக கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆயர்கள் பேரவையுடன் கலந்துரையாடியதாக ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கருத்தை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையால் வெளியிடப்படும் இலங்கையின் முதலாவதும் பழமையானதுமான சிங்கள பத்திரிகையான ஞானார்த்த பிரதீபயவின் இந்த ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் ஜனாதிபதியின் பொய்யான அறிக்கை என்ற தலைப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர்கள் பதிலளித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் கலந்துரையாடியதாகவும், கர்தினால் உடன் தொடர்பு கொள்ளப்போவதில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேர்மனியின் Deutsche Welleக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் உத்தியோகபூர் பத்திரிகையான ‘ஞானார்த்த பிரதீபய’ எழுப்பிய கேள்விக்கு  பதலளித்த, கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஹரோல்ட் அந்னி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதிக்க கத்தோலிக்க பேரவையை ஜனாதிபதி தொடர்புகொள்ள்வில்லையென, தெளிவாக தெரிவித்துள்ளார்.

“மேலும், கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஒருபோதும் ஜனாதிபதியை சந்திக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.”

மேலும், கர்தினாலுக்கும், கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதைக் காட்ட ஜனாதிபதி இந்த கலந்துரையாடலில் தோல்வியடைந்த முயற்சியை மேற்கொண்டதாக ஞானார்த்த பிரதீபய அறிக்கையிட்டுள்ளது.

“எவ்வாறாயினும், நாட்டின் தேசிய பிரச்சினைகள் மற்றும உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த நிலைப்பாடு அனைத்து ஆயர்களின் உடன்பாட்டுடன் கூட்டாக வெளிப்படுத்தப்படும் என அருட்தந்தை ஹெரோல்ட் அந்தனி பெரேரா எங்கள் செய்தித்தாளுக்கு தெளிவாக தெரிவித்தார்.”

மேலும் ஜனாதிபதியை தான் தனிப்பட்ட ரீதியில் சந்தித்த சந்தர்ப்பத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கிடைக்கப்பெற்ற, உயிர்த்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அடங்கிய ஆறு குறுந்தகடுகளை சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் ஹெரோல்ட் அந்தோனி மேலும் தெரிவித்துள்ளார்.

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர், புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருடன், குருநாகல் ஆயர் ஆலயத்தில், அந்த மறைமாவட்டத்தின் இரு அருட்தந்தையர்களை சந்தித்த கத்தோலிக்க பேரவையின் தலைவர், பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாக கூறியிருந்தார்.

கத்தோலிக்க மத நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து அங்கு விவாதிக்கப்பட்டதாக வத்திக்கானின் உத்தியோகபூர்வ கத்தோலிக்க ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles