NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட பண விவகாரம் – முன்னாள் ஜனாதிபதிக்கு மீண்டும் அழைப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.85 மில்லியன் ரூபா கைப்பற்றப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து ஜூலை 27 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சிட்டிசன் பவர் அமைப்பு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த தொகை தொடர்பில் இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னர் சம்மன் அனுப்பியிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, குறித்த பணம் லங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய வர்த்தகர்களால் வழங்கப்பட்டதாகவும், பணத்தை போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் வளாகத்தை கைப்பற்றியதன் பின்னர் நிதி அறிக்கை தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் பணத்தை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பணமோசடிச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அந்த விசாரணைகளின் பகுதிகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

Share:

Related Articles