NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி ரணில் அரசின் மீதான நம்பிக்கை 10 வீதத்திற்கும் குறைவு!


நாடு தழுவிய ரீதியில் நடத்தபப்ட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10%க்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக கொழும்பை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வெரிட்டே ரிசர்ச் (Verité Research) அமைப்பு நேற்று (6) வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

தேசத்தின் மனநிலை (Mood of the Nation) என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அங்கீகாரம் ஜூன் மாதத்தில் 21%ஆக இருந்து நவம்பரில் 9% ஆக குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. நான்கு மாதங்களில் அது அரைவாசிக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதே போன்று கடந்த நான்கு மாதங்களில் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தி என்ற காரணியும் நான்கு மாதங்களில் 12 வீதத்தில் இருந்து 6 வீதமாக குறைந்துள்ளது.

அதேபோல், பொருளாதார நம்பிக்கைக்கான சுட்டெண்ணும் 62இல் இருந்து 44 வீதமாக சரிந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் அனைத்து அம்சங்களிலும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் பாரிய வீழ்ச்சியும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

இந்த ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பு ஆண்டிற்கு மும்முறை நடத்தப்படுகிறது. இந்தக் கருத்துக்கணிப்பில் பிழை வரம்பு அதிகபட்சமாக 3%ற்கும் குறைவாக இருக்குமாறு வரையறுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு நாடு முழுவதிலிருந்தும் 1,029 மக்களிடம் கருத்துகள் கேட்டு அது தொகுக்கப்பட்டது. இந்த கருத்தறியும் பணி கடந்த ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு தொழிற்சங்கங்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அதிகரித்த வரி காரணமாக மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக தொழிற்சங்கங்கள் உட்பட பல்தரப்பினர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வாழ்க்கைச் செலவீனங்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றனர்.

Share:

Related Articles