NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜேர்மனியில் காணாமல் போன இலங்கை மாணவன்!

ஜேர்மனியின் மியூனிக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பிரிவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லசித் யசோதா குரூஸ் புள்ளே என்ற இந்த மாணவன் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கடந்த வெள்ளிக்கிழமை இவ்வாறு காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் மற்றும் சிம்பாப்வேயைச் சேர்ந்த இளைஞனுடன் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற போதே காணாமல்போயுள்ளதாக மாணவனின் சகோதரி சாமோடி மிலேஷானி தெரிவித்துள்ளார்.

தனது இளைய சகோதரர் காணாமல் போனமை தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு கோரி வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து மாதங்களுக்கு முன்னர் பொறியியல் பிரிவில் கல்வி கற்பதற்காக ஜெர்மனி சென்றதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வெளிநாடு செல்வதற்காக அடகு வைத்த தங்கப் பொருட்களை மீட்க ஐந்தரை இலட்சம் ரூபா பணம் அனுப்புவதாகவும் 12 ஆம் திகதி அந்த பணம் கிடைக்கும் எனவும் சகோதரர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

சில குழுக்கள் தனது தம்பியை இரகசியமாக மறைத்து வைத்திருப்பதாக வலுவான சந்தேகம் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share:

Related Articles