நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைவஸ்துக்களுக்கு எதிரான யுக்திய என்ற செயற்பாடு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸூக்கு வெளிநாட்டு பாதாள உலக முக்கியஸ்தர் ஒருவரிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்தே, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸூக்கு இந்த அச்சுறுத்தல் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
மாநாடு நிறைவடைந்த சிறிது நேரத்திலேயே, அமைச்சர் அலஸுக்கு அநாமதேய அழைப்பு வந்துள்ளது.
இதன்போது அமைச்சர், தமது தொலைபேசியின் ஒலியை வெளியில் கேட்குமாறு செய்து முழு உரையாடலையும் பதிவு செய்யுமாறு தமது ஊடக செயலாளரை பணித்துள்ளார்.
இதன்போது தொலைபேசியில் அழைத்தவர், அமைச்சரின் பாதுகாப்பிற்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
“இன்னும் ஏழு பூரணை நாட்களுக்குள் கவனித்துக்கொள்கின்றேன்” என அவர் சபதம் செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அலஸும், ‘இதை ஏழு பூரணை நாட்களில் அல்ல இரண்டு பூரணை நாட்களில் செய்து முடிப்பேன் என்றும் தேவையானதைச் செய்வதற்கு தாம் அர்ப்பணிப்புடன் உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.