சமீபத்தில் சண்டிகரில் தெருக்கடை வியாபாரி ஒருவர் டீசல் ஊற்றி பரோட்டா செய்வதாகச் சொல்லப்பட்ட வீடியோ வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது.
அந்த வீடியோவை எடுத்தவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என அந்தக் கடைக்காரரிடம் கேட்க அவர், `டீசல் பரோட்டா… தினமும் 300 பேருக்கு விற்கிறேன்’ எனச் சொல்லி அதிக எண்ணெய்யை ஊற்றிச் சமைக்கிறார்.
இந்த வீடியோ வைரலானதோடு, பலரும் உணவுப் பாதுகாப்பு ஆணையமான எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-யையும் (FSSAI) டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் அந்தக் கடையின் ஓனர் சன்னி சிங், டீசல் பரோட்டா போன்று எதுவும் நாங்கள் செய்வதில்லை என்று விளக்கமளித்துள்ளார். `வீடியோவை எடுத்தவர் ஃபன் செய்ய வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல்லச் சொன்னார். பரோட்டா எண்ணெய், வெண்ணெய், நெய்யில் தான் தயாரிக்கப்படும். யாரும் டீசல் பரோட்டாவை உண்ணமாட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
எங்களது கடையில் சுகாதாரமான முறையில் செய்யப்படும் உணவுகளையே வழங்கி வருகிறோம். மக்களின் உயிருடன் நாங்கள் விளையாடவில்லை. இந்த வீடியோ இவ்வளவு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை; அந்த வீடியோவை எடுத்தவரும் அதனைப் பதிவிலிருந்து நீக்கியுள்ளார்’ என்று கூறினார்.