பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பான அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் நான்காவது சுற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை கடந்த வாரம் கனடாவின் ஒட்டாவா நகரில் நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற 175 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான முக்கிய விவாதம் பிளாஸ்டிக் உற்பத்திகளை கட்டுப்படுத்துவதா?இல்லையா? என்பதுதான்.
பிளாஸ்டிக் உற்பத்திகளில் பெரும்பாலானவை புதைவடிவ எரிபொருட்கள் மற்றும் இரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
மேலும், அவை முழுமையாகவோ அல்லது எளிதில் மக்காததாக இருப்பதன் காரணமாக பயன்பாட்டுக்குப் பிறகு மாசுபாடை ஏற்படுத்துவதாக அமைகின்றன.
பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பாவனை பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
பிளாஸ்டிக் மாசுபாடைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய போராட்டங்களுக்கு மத்தியில், பிளாஸ்டிக் துடைப்பான்களை தடை செய்வதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக பிரித்தானியா கடந்த மாதம் கூறியிருந்தது.
பிளாஸ்டிக் துடைப்பான்களினால் தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக் (microplastics) சுற்றுச்சூழலில் கலப்பதாக நிருபிக்கப்பட்ட நிலையிலே, பிரித்தானியா இவ்வாறு அறிவித்தது.
மைக்ரோபிளாஸ்டிக் என்பது வெளித்தோற்றத்தில் பிளாஸ்டிக்கால் செய்யப்படாத பொருட்களாக இருக்கின்ற போதிலும், அவை அப்புறப்படுத்தப்பட்டவுடன் பிளாஸ்டிக்கை சுற்றுச்சூழலில் வெளியிடுகின்றன.
இதன்படி, ”கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக்குகள் எல்லா இடங்களிலும் உள்ளன” என கனடாவில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு பேராசிரியரான டோனி வால்கர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மைக்ரோபிளாஸ்டிக் என்பது பிளாஸ்டிக்கின் சிறிய துகள்களாகும் எனவும், அவை நம் உணவில் கூட உற்புகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் மக்கும் பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுபவை, இயற்கையாகவே அப்புறப்படுத்தப்பட்டவுடன் அழிந்துவிடும் என விளம்பரப்படுத்தப்படுகிறது.
ஆனால், இவை மைக்ரோபிளாஸ்டிக்கை கொண்டிருக்கும் எனவும் பேராசிரியரான டோனி வால்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையிலே எதிர்பாராத, வியக்கத்தக்க வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களும் பிளாஸ்டிக்கை கொண்டுள்ளன.
இதன்படி, சூயிங் கம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான ‘கம் பேஸ்’, தேநீர் கோப்பைகள், சன்ஸ்கிரீன், குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட அலுமினிய டின்கள், இரசீதுகள், பற்பசை, சலவைப் பொருட்கள் மற்றும் ஒப்பனை பொருட்கள் இவை எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் இருக்கின்றது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் சபை அமர்வின் போது, பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பான சர்வதேச சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இத்தீர்மானத்தின் கீழ் 175 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய பிளாஸ்டிக் மா தொடர்பான அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழு இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
இதன்படி, நான்காவது அமர்வு கடந்த வாரம் கனடாவில் நிறைவடைந்த நிலையில், இறுதி அமர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் தென் கொரியாவில் நடைபெறவுள்ளது.
இம்முறை, உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கின் அளவைக் கட்டுப்படுத்துவது குறித்து பெரும் கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்தை பொறுத்தவரை குறித்த நாடுகள் ஒரு உடன்பாட்டை எட்டுவது முக்கியம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகெங்கிலும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான பிளாஸ்டிக்கின் வருடாந்திர உற்பத்தி தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) கணிப்பிட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய உலகளாவிய பிளாஸ்டிக் உற்பத்தி ஆண்டுதோறும் 400 மில்லியன் மெட்ரிக் டொன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், கிரமமாக மீள்சுழற்சி செய்யப்படுவது 9 வீதம் மாத்திரமே எனவும் 91 வீதம் கழிவாக வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் உற்பத்தி என்பது மிக முக்கியமாக பொருளாதார காரணி சார்ந்தது என்பதால் பிளாஸ்டிக் உற்பத்தியை சில நாடுகள் குறைக்க விரும்பவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில நாடுகள் பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
பிளாஸ்டிக் உற்பத்தியை நிறுத்துவது தங்கள் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று இந்த நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் உற்பத்தியில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு மிகவும் கடினமாக உழைக்குமாறு பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பான அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளுக்கு நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் ஆறுகள் மற்றும் கடல் வழியாக எல்லை கடந்து சூழலுக்கு மாசுபட்டை ஏற்படுத்துகின்றன.
இந்த பிரச்சினையை கையாள்வதில் நாடுகள் சுய விருப்புடன் செயற்பட வேண்டுமென சூழலியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பட்டுமல்ல வளிமண்டலத்தில் காணப்படுகின்றது. உண்மையில் அவை காற்று மற்றும் நீரோட்டங்கள் வழியாக கண்டங்களுக்கு இடையில் பயணிக்கின்றன.
ஆகவே, பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு, அதனால் ஏற்படும் விளைவுகள் என்பது ஒரு நாடோடு நின்றுவிடுவதில்லை. எதிர்காலத்தில் உலக நாடுகள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய ஆபத்தும் இதுவாகத்தான் இருக்கின்றது.