இலங்கையின் ஆண்கள் கால்பந்தாட்ட அணி, முக்கியமான இரு போட்டிகளின் தகுதிகாண் சுற்றுகளில் பங்கேற்பதற்கான தகுதியை இழந்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது.
இலங்கையின் ஆண்கள் கால்பந்தாட்ட அணி, 2024 பேரிஸ் ஒலிம்பிக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதுக்குட்பட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க தகுதி இழந்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை, கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது.
அதன்படி, அந்தத் தடை நீங்கும் வரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எந்தொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சரால் நடத்தப்பட்ட தேர்தலில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை இடம்பெற்றதாக, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் மே 25 ஆம் திகதி குறித்த போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கப்படவுள்ளதாகவும் அதில் இலங்கை ஆண்கள் கால்பந்தாட்ட அணி இடம்பெறாது எனவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.