NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் மூலம் தீர்வு…! அநுர தெரிவிப்பு

தேசிய இனப் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் யாழில் இன்று(11) இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய சந்திப்பின் போது, மாகாண சபை முறைமை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை 2019 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே தாங்கள் இடம்பெறச் செய்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியினர் சுட்டிக்காட்டினர்.

தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் தீர்வாகாது என்றும் தமிழர் தரப்பு கூறுவதைப் போலவே, அது தீர்வு அல்ல என்பதைத் தாங்களும் ஏற்றுக்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்ததுடன், தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு புதிய அரசமைப்பு மூலமே எட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அதுவரையில் மாகாண சபை முறைமை நீடிக்க வேண்டும். தாமதிக்காமல் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். 13 ஆம் திருத்தம் மூலம் அரசமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு எந்த வகையில் அமைய வேண்டும், அதை அணுகுவதற்கான படிமுறைகள், பாதைகள் குறித்து எல்லாம் நாங்கள் இருந்து வரையறை செய்து, முடிவுகளை எட்டி, திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும்,அந்தப் படிமுறைக்கு அமைய புதிய அரசமைப்பு உருவாக்கத்தையும், அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையும் நாம் எட்ட வேண்டும் என்ற கருத்து நிலைப்பாட்டை அவர்கள் முன்வைத்தனர்.

அவற்றை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பகிரங்க அறிவிப்புக்களிலும் வெளிப்படுத்துங்கள். நாம் பரிசீலித்து உரிய முடிவை எடுப்போம் என்று அவர்களுக்குத் தெரியப்படுத்தினோம் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

Share:

Related Articles