2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதில் முதலிடம் பெற்ற மாணவர் 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 17 மாணவர்கள் 187 முதல் 186 வரையான மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்;டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஆண்டு 77.75 சதவீத மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்த நிலையில், இம்முறை 77.96 வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 37.70 வீதமான மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் கடந்த ஆண்டு 45.06 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 16.05 வீதமான மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சித்தி வீதம் அதிகரித்துள்ளதுடன், கடந்த ஆண்டு 15.22 சதவீதமான மாணவர்கள் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்றிருந்ததாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.