உலகில் விலைமதிப்பற்றதாகக் கருதப்படும் முக்கியமானவற்றுள் ஒன்று மனித உயிர். எதைக் கொடுத்தும் பெற முடியாத மனித உயிரை இயற்கைக்கு மாறாக தாங்களே மாய்த்துக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி எண்ணும் போது மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கின்றது. ஆனால் தற்கொலை செயல் நிகழ்வதற்குக் காரணிகள் என்ன? தடுக்கும் முறைகள் என்ன? தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு? தீர்வு தான் என்ன?
உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒரு தற்கொலை நிகழ்வதாகவும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அறியப்படுகிறது. மக்கள் தொகை ஒருபுறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கடந்து சில ஆண்டுகளாக தற்கொலைகளும் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.
தற்கொலை எண்ணம் யாருக்கு தோன்றும்? உலகில் பெரும்பாலானோர்க்கும் ஏதோ ஒரு சூழலில் தற்கொலை எண்ணம் தோன்றியிருக்கும்.அதிலிருந்து மீண்டு வந்து சாதனை படைத்தவர்கள் பலர் உண்டு. தற்கொலை எண்ணம் பாகுபாடு இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் தோன்றலாம். இது பாலின வேறுபாடு, வயது வித்தியாசம் பொருளாதார பின்பலம் போன்றவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டது. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் (எவ்விதத் துறையைச் சார்ந்தவர்களாக இருப்பினும்) கூட தற்கொலை செய்து கொள்வது என்பது மிகச் சாதாரண நிகழ்வாகிவிட்டது. அவர்களின் மன அழுத்தத்திற்கு முன் அவர்களுடைய பணம், பதவி, புகழ் போன்றவைகள் பயனற்றதாகி விடுகிறது.
தற்கொலை எண்ணம் 100இல் 17 பேருக்கு தோன்றக்கூடியதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மேலும் பெண்களை விட ஆண்கள் தான் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இளம் வயது தற்கொலை என்பது இந்தியாவில்தான் அதிகம் நிகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைகளும் தவறான கருத்துக்களும்: மனதளவில் பலவீனமானவர்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறுபவர்கள் உண்மையில் அவ்வாறான செயலில் ஈடுபடமாட்டார்கள் போன்ற கருத்துக்களும், அனுமானங்களும் நிலவி வருகின்றது. ஆனால் இது முற்றிலும் தவறானவை.
தற்கொலைக்கான காரணிகள்:
தற்கொலை எண்ணம் தோன்றுவது இந்த குறிப்பட்ட நேரத்தில் தான் என்று எவராலும் சுட்டி காட்ட இயலாது. சிலர் தன்னைச் சுற்றி ஏற்படும் குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு காண இயலாத போது தான் தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. இது மட்டுமல்லாமல் தற்கொலை எண்ணம் ஏற்பட பிரதான காரணம் மன அழுத்தம் ஆகும்.
அளவுக்கு அதிகமான பொருளாதார நெருக்கடிகள்
நெருக்கமானவர்களின் மரணம்
காதல் தோல்வி
குடும்ப வன்முறை
உறவுமுறைகளில் ஏற்படும் ஏமாற்றங்கள்
பயம்
கவலை
பாலியல் துன்புறுத்தல்கள்
நாள்பட்ட நோய்கள்
விவாகரத்து
முந்தைய தற்கொலை முயற்சிகள்
தீய பழக்கங்களுக்கு அடிமையாதல்
பணிச்சுமையால் ஏற்படும் மனச் சோர்வு
அவமானங்கள்
நம்பிக்கையின்மை
மாணவர்களிடையே ஏற்படும் கல்வி சார்ந்த ஏமாற்றங்கள்
சமீப காலமாக வலம் வரும் இணைய அச்சுறுத்தல்கள் (சைபர் புல்லியிங்)
போன்றவைகள் தற்கொலைக் காரணிகளாகக் கருதப்படுகின்றன. பெரும்பாலும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள விருப்பம் இல்லாமல் தான் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதற்குக் காரணம் நொடி பொழுதில் ஏற்படும் எதிர்மறை எண்ணத்தின் தூண்டுதல்களால் தற்கொலைப் மட்டுமே தீர்வு என்ற தவறான எண்ணம் தோன்றுவது.
தற்கொலை – அறிகுறிகள்:
தற்கொலைப் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள் உடலளவிலும், மனதளவிலும் அதிக மாற்றங்களுடன் காணப்படுவார்கள். அவை::
குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல்
அதிகமாக அல்லது குறைவாக உறங்குவது
தோற்றத்திலும், நடத்தையிலும் திடீர் மாற்றம்
பசியின்மை
விரக்தியுடன் காணப்படுவது
நம்பிக்கையின்மை
அளவுக்கு அதிகமான கோபம்
மரணம் மற்றும் தற்கொலைப் பற்றி அதிகமாக பேசுவது
இளைஞர்கள் மற்றும் இளம் வயதினர் தற்கொலைகளுக்கு கல்வி சார்ந்த தோல்வி பய, காதல் தோல்வி போன்றவை தான் முதன்மைக் காரணங்களாக உள்ளன. சில சமயங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை கூட காத்திராமல் தற்கொலை செய்து கொள்வது போன்ற மிகவும் வேதனையான. செயல்களும் நிகழ்வதுண்டு. தங்கள் வாழ்வில் சந்திக்கும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும், அஅவமானங்களையும் எதிர் கொள்ள துணிவில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இவை மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தில் தற்கொலைப் பிண்ணனி உள்ளவர்களுக்கு மரபணுக்கள் மூலமாகவும் தற்கொலை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்கொலைகளை தடுக்க இயலுமா? ஆம். கண்டிப்பாக இயலும். அதற்கு முதலில் நாம் தற்கொலை எண்ணத்தின் அறிகுறிகளையும், காரணிகளையும் நன்கு அறிந்து வைத்திருத்தல் வேண்டும். (முந்தைய பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல்) மனச்சோர்வினால் தற்கொலை எண்ணம் கொண்டவரிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பையும், சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களுடைய மனச் சோர்விற்கானக் காரணிகளையும் கண்டறிய முடியும். மேலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் தோள் சாய. தோள் தந்து மனச்சோர்விலிருந்து விடுபட உதவி புரிய வேண்டும். இதற்கு அவர்களின் மனக் குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும் செவி சாய்ப்பது மிகவும் அவசியமானது. அன்புடனும், அக்கறையுடனும் நாம் அவர்களின் மனக்குமுறல்களுக்கு செவி சாய்த்தோமேயானால் அவர்களின் மன பாரம் வெகுவாக குறைந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவியாக இருக்கும். மேலும் அது போன்ற சமயங்களில் வாக்கு வாதங்களைத் தவிர்த்து அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது மிகவும் சிறந்தது.
நம்முடைய கண்ணோட்டத்தில் அவர்களின் குழப்பபங்களும் குமுறல்களும் அர்த்தமற்றதாகவோ அல்லது அற்பத்தனமாகவோ தோன்றலாம் ஆனால் அதுவே அவர்களை தற்கொலை எண்ணம் வரை கொண்டு சென்றிருக்கக்கூடும். தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் மன நிலையில் உள்ளவர்களை ஒரு போதும் தனிமையில் விட கூடாது. அது அவர்களை மேலும் ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்லக்கூடும்.
குழந்தைகளுக்கு வெற்றி போலவே சிறு தோல்வியும் நல்லதே. அவர்களை வெற்றிக் கனியை மட்டுமே சுவைக்க வைத்துப் பபழக்கினால் தோல்விகளை சந்திக்க நேரிடும் போது அதை எதிர்கொள்ளத் தெரியாமல் தன்னம்பிக்கையை இழக்க நேரிடுகிறது. எனவே தோல்விகளை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றியமைத்துக் கொள்ள கற்றுத்ததர வேண்டும். இது அவர்களுக்கு தோல்வி பயத்திலிருந்து வெளிவர உதவும்.
அதே போல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தயங்காமலும், பயப்படாமலும் தங்களிடம் வந்து தெரிவிக்கும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைப் பற்றி அச்சமின்றி தெரிவிக்க உதவும் இல்லையெனில் நாளடைவில் இதுவே அவர்களை உயர் மன அழுத்தத்திற்கு கொண்டு செல்லக்கூடும்.
மேலும் தேர்வில் தோல்வி அடைந்தால் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டதாக எண்ணி மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். மதிப்பெண்கள் என்பது எண்கள் மட்டுமே என்றும் அதை தாண்டி வாழ்வில் சாதிக்க பல வழிகள் உள்ளன என்பதை அவர்கள் மனதில் பதிய வைத்தால் தற்கொலை எண்ணத்திற்கு இடமளிக்காமல் தோல்விகளையும், சறுக்கல்களையும் நேர்மறை எண்ணத்தோடு எதிர் கொள்ள பழகுவார்கள்.
இளம் பருவத்தினர் மட்டுமன்றி முதுமை பருவத்திலுள்ளவர்களும் தற்கொலை எண்ணங்களுக்கு உட்படுகின்றனர். நாள்பட்ட வியாதிகள், வாழ்க்கைத் துணையின் பிரிவால் ஏற்படும் தனிமைத் துன்பம் போன்றவற்றால் அதிகம் பாதிப்படைபவர்கள் எளிதல் தற்கொலை முயற்ச்சியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அன்போடும், பரிவோடும் அரவணைக்கப்பட்டால் தற்கொலை பிடியிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
பொதுவாக தற்கொலை எண்ணத்திலிருப்பவர்களுக்கு அறிவுரைகள், வெற்று சமாதானங்கள் போன்றவை மட்டுமே உதவாது. உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளும் தேவை. ஆண்டு தோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது
தற்கொலை எண்ணத்தை விரட்டுவது எவ்வாறு? நம் உடலை மட்டும் உடலை மட்டுமல்ல மனதையும் ஆரோக்கியமாக வைத்திருத்தல் அவசியம் ஏனென்றால் மனதிற்கும் தற்கொலைக்கும் நேரடித் தொடர்புள்ளது. ஒருவர் மனதளவில் ஆரோக்கியமாக இருந்தால் தான் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.
மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இதோ சில வழிகள்:
எண்ணம் போல் வாழ்வு’ என்பதற்கேற்ப எண்ணங்கள் தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. எனவே நல்ல எண்ணங்களை மனதில் விதைத்தல் சாலச் சிறந்தது. ‘நடக்காது’, ‘கிடைக்காது’, ‘முடியாது’ என்பது போன்ற எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதே போல் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டவர்களை நண்பர்களாகக் கொண்டிருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை விட்டு விலகி இருத்தல் நல்லது. ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற நேர்மறையான எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் ஏமாற்றங்களையும், தோல்விகளையும் கூட எளிதில் கடந்த செல்ல முடியும்.
பகிர்தல் வேண்டும்: வாழ்க்கையின் சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்கள் தேவை. உணர்வுகளையும், அனுபவங்களையும் பகிர்வதால் மன பாரமும், மன அழுத்தமும் நீங்கி மனம் இலகுவாகும். மேலும் மற்றவர்களின் அனுபவங்களையும், போராட்டங்களையும் கேட்கும் பொழுது, இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்கின்ற நிதர்சனத்தையும் உணர்ந்து கொள்ள பகிர்தல் பெரிதும் உதவும்.
சுயக்கட்டுபாடு: சுயக்கட்டுபாடு உள்ளவர்கள் அதிக ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் விரும்பியதை அடைவதற்கு சிறிது கால தாமதமானாலும் சுயக்கட்டுபாடு இருந்தால் அந்தத் தாமதத்தையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். சுயக்கட்டுபாடு திடமான மனோபலத்தை தந்து வெற்றி பாதையில் வழி நடத்திச் செல்லும்.
நம்பிக்கை: வாழ்க்கை என்ற வாகனம் ஒடுவதற்கு நம்பிக்கை என்னும் சக்ககரம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளையும், போராட்டங்களையும், எதிர் கொள்ள நேரும் போது ‘இதுவும் கடந்து போகும்’ என்ற அசையாத நம்பிக்கை எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கைச் சுமையாகத் தெரிவதில்லை. ‘ நம்பினோர் கெடுவதில்லை’ இது நான்கு மறைத் தீர்ப்பு.
சுயமதிப்பீடு: தன்னைப்பற்றி சுயமதிப்பீடு செய்து அதற்கு ஏற்றார்போல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டால் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுக்கோ இடமே இருக்காது. தெளிவான முடிவுகளை எடுக்கவும், சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும் சுயமதிப்பீடு பெரிதும் துணை நிற்கிறது.
இசை: மனதை வருடிக் கொடுத்து அமைதியாக்கும் வல்லமை இசை க்கு உண்டு. எப்போதும் நம் மனதை ஆட்கொண்டிருக்கும் சிந்தனைகளும், குழப்பங்களும் இசை கேட்கும் போது விலகிச் செல்லும் ஏனென்றால் மன உளைச்சலை போக்க எளிய அருமருந்து இசைதான். எனவே உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி செய்வதைப் போல், மன ஆரோக்கியத்திற்கு இசை கேட்பதை அன்றாட வழக்கமாக்கிக் கொண்டால் மனம் புத்துணர்வு பெறும்.
புத்தக வாசிப்பு,தியானம்: இசையைத் தொடர்ந்து புத்தக வாசிப்பு என்பதும் மனப் பயிற்சிகளில் ஒன்று. புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் ஒருவரின் சிந்தனைத் திறன் மேலோங்குகிறது. தனிமைச் சிறையில் சிக்குண்டு தவிப்பதைத் தவிர்த்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது. தியானம் செய்து பெறும் ஆனந்த நிலையை புத்தக வாசிப்பின் மூலம் பெறலாம். உற்ற நோக்கி ஆழ்ந்து அனுபவித்து படிக்கும் போது வெளி உலக தாக்கம் ஏற்படாது அதனால் மனதை ஒரு நிலைப் படுத்தி புதிய சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.
பழக்கவழக்கங்கள்: நம் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது. இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில் மனதை ஆரோக்கியமாக வைக்க நம்முடைய நல்ல பழக்க வழக்கங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது, விடுமுறை நாட்களில் வெளியிடங்களுக்கு செல்வது போன்ற பழக்கங்களினால் உறவுகளின் பிணைப்பைப் பலப்படுத்தும். பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களையும், எண்ணங்களையும் குழந்தைகளிடம் திணிக்காமல் அவர்களின் திறமைக்கேற்ப ஊக்கப்படுத்தினால் வாழ்க்கை மேம்படும்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்.
1926 – National Mental Health Helpline
1926 – National Mental Health Helpline is dedicated to providing 24/7, free and confidential support by phone and text message.