பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து முன்னணி வீரர் தமிம் இக்பால் விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிம் இக்பாலின் முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து குணமடைந்துவரும் நிலையில் அடுத்துவரும் ஆசியக்கிண்ணத் தொடரில் விளையாட மாட்டார் என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் அடுத்துவரும் உலகக்கிண்ணத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிம் இக்பால் ஆசியக்கிண்ணத்தொடரில் விளையாடாவிட்டாலும் அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடருக்காக தயாராகிவிடுவார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். எனினும் பங்களாதேஷ் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஓய்விலிருந்து திரும்பியிருந்தார்.எவ்வாறாயினும் தலைவர் பதவி தொடர்பில் கிரிக்கெட் சபையிடம் கலந்துரையாடிய பின்னர் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தமிம் இக்பால் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய தலைவரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.