இந்தியா – திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் 29 வயதுடைய இளைஞர், ஒருவர் மறுமணம் செய்துகொண்ட பெண்ணால் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கேரள மாநிலம் கொழிஞ்சம்பாறை பகுதியை சேர்ந்த திருமண தரகர் ஒருவர் குறித்த இளைஞரை அணுகி, கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து, அந்த பெண்ணை பேசி திருமணம் செய்ய நிச்சயித்துள்ளார். அப்போது பெண் வீட்டில் வசதி இல்லாததன் காரணமாக, உதவி செய்யும்படி தரகர் கேட்டுக்கொண்டுள்ளார். இதை ஏற்று இளைஞரின் வீட்டார் அந்தப் பெண்ணுக்கு 1½ பவுனில் நகை வாங்கி போட்டுள்ளனர். மேலும் தரகருக்கு ரூ.80 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளனர்.
திருமணத்தின் பின்னர், புதுப்பெண், முதலிரவை தள்ளிப்போட்டுள்ளதுடன், மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறி, அவரை பார்க்க செல்ல வேண்டும் என்று தெரிவிக்கவேஇ தனது மனைவியை அவர் பொள்ளாச்சிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
பொள்ளாச்சிக்கு சென்றதும் அந்த கேரள பெண் திடீரென மாயமாகிவிட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சோகத்துடன் தாராபுரத்திற்கு வந்த குறித்த இளைஞர், நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடுஅளிக்கப்பட்டது. விசாரணையில்இ நகை-பணத்திற்காக இளைஞரை ஏமாற்றி கேரள பெண் திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண்ணின் கணவர் தான் திருமண தரகர் போல் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் திருமணம் ஆகாத பல வாலிபர்களிடம் பணம் மற்றும் நகையை பறிப்பதற்காக அந்த தரகர் தனது மனைவியையே வேறு வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதன திருமண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு குழந்தையும் உள்ளது. இருப்பினும் அவர்கள் பணத்திற்காக இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.