கோட்டாபய ராஜபக்ச தாம் எவ்வாறு பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என்பது தொடர்பாக நூல் ஒன்றை எழுதி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அதனை வெளியிட்டிருந்தார்.
இந்த புத்தம் பெருமளவான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் கோட்டாபய புத்தகத்தில் எழுதியுள்ள விடயங்களை வாசிக்க ஆர்வமாக புத்தகத்தை கொள்வனவு செய்து வருகின்றனர்.
முதல் பதிப்பில் அச்சிடப்பட்ட அனைத்து புத்தகங்களும் விற்று தீர்ந்துவிட்டதாக விஜித யாப்பா பதிப்பகத்தின் தலைவர் விஜித யாப்பா தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் தமது புத்தகக் கடைகளில் இருந்து வாங்கியதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நூலின் பிரதான விநியோகஸ்தர் தமது நிறுவனம் எனத் தெரிவித்த விஜித யாப்பா, மேலும் ஒரு தொகுதி அச்சிடப்பட்ட புத்தகங்களை விநியோகிப்பதற்காக கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நூலை வாங்குவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள புத்தகக் கடைகளில் இருந்து பல கோரிக்கைகள் கிடைத்துள்ளது. புத்தகத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக விற்பனையாகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு நெட்ஃபிக்ஸ் திரைப்படம் ஒன்றை தயாரிக்கும் திட்டம் இருப்பதாக கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர் எரந்த கினிகே தெரிவித்துள்ளார்.
இதற்கான திரைக்கதை, ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டதென்றும் அவர் கூறியுள்ளார்.