தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக பொலிஸார் அவரது இல்லத்திற்குப் பிரவேசித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான இராணுவ சட்டத்தினை அமுல்படுத்தியதை அடுத்து தென்கொரியாவின் ஜனாதிபதி பதவியிலிருந்து யூன் சுக் யோல் நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து யூன் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், கிளர்ச்சியைத் தூண்டியதற்காகவும் விசாரணை அதிகாரிகள் முன் பிரசன்னமாகுமாறு அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இதற்குப் பதிலளிக்க மறுத்ததை அடுத்து, நீதிமன்றம் இந்த வாரம் முற்பகுதியில் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்தது.
இதற்கமைய யூன் சுக் யோலை கைது செய்வதற்காக அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணியளவில் பொலிஸார் அவரது இல்லத்திற்குப் பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தநிலையில் யூன் கைது செய்யப்படுவதனை தடுக்கும் முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளமையால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.