NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய கீதத்தை பாடுவதற்கு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த முன்மொழிவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசேட புலனாய்வுக் குழுவால் தேசிய கீதத்தை பாடுவதற்கு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கீதத்தை எவ்வாறு பாடுவது என்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆரம்ப நிகழ்வுகளில் பாடகி உமாரா சிங்ஹவங்ச தேசிய கீதத்தை முறையற்ற விதத்தில் பாடியுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்த குறித்த குழு நியமிக்கப்பட்டது.

அதன்போது, அவர் தேசிய கீதத்தை தவறான முறையில் பாடியதாகவும் உறுதி செய்துள்ளனர்.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப விழாவில் தேசிய கீதத்தில் பாடகி உமாரா ‘மாதா’ என்பதற்குப் பதிலாக ‘மஹதா’ என்று பாடியதாக கடந்த 18ஆம் திகதி பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு செயலாளரிடம் கையளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் உமாரா சிங்ஹவங்ச மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையிடம் மேற்படி குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் படி, தேசிய கீதத்தின் தொடர்புடைய வசனங்கள் நடுத்தர தொனியில் பாடப்பட வேண்டும்.

எனினும், பாடகி உமாரா உயர்வான தொனியில் பாடியதை விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், சட்டமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், பாடகி உமாரா சிங்ஹவங்ச அரசியலமைப்பை மீறி தேசிய கீதத்தை பாடுவது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசாரணைக் குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், தேசிய கீதத்தை பாடுவதற்கு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

Share:

Related Articles