பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 29ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் பாராளுமன்றம் விளக்கமளித்துள்ளது
பாராளுமன்ற செலவுத் தலைப்பின் கீழ் சம்பிரதாயமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் தேநீர் விருந்துபசாரத்திற்காக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வில் 287,340 ரூபாயும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசராத்திற்கு 339,628.55 ரூபாயும் செலவு செய்யப்பட்டிருப்பதாக குறித்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2020.08.20ஆம் திகதியும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2024.11.21ஆம் திகதியும் நடைபெற்றன.
இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றம் மற்றும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரங்களுக்கான செலவுகள் சில காரணங்களினால் வேறுபடுவதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது
ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாராளுமன்றங்களின் முதல்நாள் அமர்வுகளுக்கிடையில் 4 வருட கால இடைவெளி காணப்படுவதாகவும் இக்கால இடைவெளியில் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற இறக்கங்கள் விருந்துபசாரத்துக்கான செலவுகள் உள்ளிட்ட ஏனைய செலவினங்கள் அதிகரிப்பதற்குப் பிரதான காரணமாக அமைந்தது என பாராளுமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்தமையால் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் அண்ணளவாக 100% இனால் அதிகரித்துள்ளன என்பதைத் தெரிவிக்க விரும்புவதாகவும் பாராளுமன்றம் கூறுகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி, இராஜதந்திரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாகவும் பாராளுமன்றம் குறிப்பிட்டுள்ளது.