(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் உயிர் இரசாயனவியல் திணைக்களத்தினால் உற்பத்தி செய்யப்படும் தேயிலை வைன் உள்ளுர் சந்தைக்கு வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக, தேயிலை ஆராய்ச்சி சபையின் தலைவர் சிந்தக லொகுஹெட்டிகே தெரிவித்தார்.
தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய நீண்ட கால ஆராய்ச்சியின் வெற்றியின் விளைவாக, தேயிலை வைன் தயாரிக்க முடிந்தது என்றும் அதன் பிறகு இதற்கான காப்புரிமையும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் காப்புரிமை பெற்று 18 ஆண்டுகள் கடந்தும் காப்புரிமை காலாவதியாகும் முன்னர் சந்தைக்கு வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே தனியார் நிறுவனத்துடன் தேயிலை வைன் உற்பத்திக்காக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சிலோன் டீ என்ற பெயரைப் பயன்படுத்தி இந்த பெறுமதி சேர்ப் பொருளை விளம்பரப்படுத்த முடியும் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த தயாரிப்பை உலக சந்தையில் வணிகமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேயிலை வைன் மற்றும் திராட்சை சார்ந்த வைன் தயாரிப்புகளை விட வித்தியாசமான சுவையுடன் இருப்பதால் உலக சந்தையில் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேயிலை வைனில் உள்ள அல்கஹோலின் அளவு சுமார் 12 சதவீதம் என்றும், தேயிலை இலைகளின் சுவை, நிறம் மற்றும் வாசனையைப் பாதுகாக்கும் வகையில் இந்த தயாரிப்பு தயாரிக்கப்படுவதாகவும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.