NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொழிநுட்ப வளர்ச்சியுடன் கூடிய அறிவுசார் திட்டங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் 10 வருட அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நாட்டிற்கும் சமூகத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் விசேட பணியை ஆற்றிய முன்னாள் மாணவர்களுக்கான முதலாவது விருது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பேராசிரியர் தேஷ்மான்ய ஜே.பி.திசாநாயக்க, திலக் கருணாரத்ன உள்ளிட்ட 11 பேர் இவ்விருதைப் பெற்றனர்.

சகல பல்கலைக்கழகங்களிலும் புதுமையின் தேவை இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காணுமாறும் கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

இந்த 10 வருட அபிவிருத்தித் திட்டத்தை விரைவில் தயாரிப்பதற்கு தங்களை அர்ப்பணிக்குமாறு முன்னாள் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறு செய்யாவிடின் கொழும்பு பல்கலைக்கழகம் அந்த விசேட செயற்பாட்டிற்கு பங்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Share:

Related Articles