சந்தேகத்திற்கிடமான முறையில் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை மாடல் நடிகையான பியுமி ஹன்சமாலியின் பெயரில் இந்நாட்டில் பிரதான 8 வங்கிகளில் 19 கணக்குகள் தொடர்பிலான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு எட்டு வங்கிகளின் முகாமையாளர்களுக்கு கொழும்பு நீதவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று (19) உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு ஹில்டன் குடியிருப்பில் வசிக்கும் பியுமி ஹன்ஸமாலி என்பவர் 80 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியில் வாங்கி ரேஞ்ச் ரோவர் சொகுசு கார், கொழும்பு 07 பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் 148 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ள வீடு, குறுகிய காலத்திற்குள் எட்டு முக்கிய வங்கிகளில் பேணப்பட்ட 19 கணக்குகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் பணப் புழக்கம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழங்கிய அறிக்கையை பரிசீலித்தே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பியுமி ஹன்சமாலி என்ற மாடல் நடிகை, சந்தேகப்படும்படியாக பல கோடி ரூபாய் பணம், சொத்து சம்பாதித்ததாக அளிக்கப்பட்ட புகார்களை விசாரித்த குற்றப் புலனாய்வுத் துறை, அவரது வங்கிக் கணக்குகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்கள் குறித்தும் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவினர் இவருக்கு சொந்தமான 8 முக்கிய வங்கிகளின் 19 கணக்குகளை சோதனையிட நீதிமன்றில் நேற்று (19) அனுமதி பெற்றிருந்தனர்.
அதன்படி, அவருக்கு சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை பரிசோதிக்க மாளிகாகந்த நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
கொழும்பில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மாடல் நடிகை பியுமி ஹன்சமாலி, 800 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஜீப்பைப் பயன்படுத்தி வருவதாகவும் தனியார் நிறுவனம் ஒன்றைத் திறந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளதுடன், இவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலரான சஞ்சய் மஹவத்தவால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.