உலகக்கிண்ண தொடருக்காக தென்னாபிரிக்காவின் கேப் டவுனுக்கு செல்வதற்கு முதல் பொட்ஸ்வானாவில் சில வெற்றிகளை பெற்று இலங்கை வலைப்பந்தாட்ட அணி நம்பிக்கையை பெற்றுள்ளது.
வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கு முகங்கொடுப்பதற்கு முன்னர், இலங்கை வலைப்பந்தாட்ட அணி பொட்ஸ்வானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
குறித்த இந்த சுற்றுப்பயணத்தில் பொட்ஸ்வானா தேசிய அணியை இரண்டு தடவைகள் எதிர்கொண்டதுடன், பொட்ஸ்வானா பொலிஸ் மற்றும் கழக அணியான பி.டி.எப் கெட்ஸ் (BDF Cats) போன்ற அணிகளுடன் விளையாடியது.
முதல் போட்டியில் பொட்ஸ்வானா அணியை எதிர்கொண்ட இலங்கை அணி கடும் போட்டியை கொடுத்து 51-70 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் போட்டியில் தோல்வியடைந்தது. முதல் மூன்று காற்பகுதிகளில் 12-19, 16-13 மற்றும் 13-15 என விறுவிறுப்பாக நகர்ந்திருந்த போதும், கடைசி காற்பகுதியில் பொட்ஸ்வானா அணி 23-10 என்ற முன்னிலையை பெற்றுக்கொண்டு வெற்றியை தமதாக்கியது.
குறிப்பாக நான்காவது காற்பகுதியில் இலங்கை அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் போட்டி பயிற்சியை கொடுக்கும் வகையில் பயிற்றுவிப்பாளர் திலங்க ஜினதாசவினால் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து பொட்ஸ்வானா பொலிஸ் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 70-36 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் 16-9, 17-14, 17-7 மற்றும் 20-6 என காற்பகுதிகளை இலங்கை கைப்பற்றியிருந்தது.
இரண்டாவது போட்டியின் வெற்றியின் பின்னர் 3வது போட்டியில் பி.டி.எப் கெட்ஸ் அணியை எதிர்கொண்டு 55-53 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை திரில் வெற்றிபெற்றது. இந்த போட்டியின் காற்பகுதிகள் 14-16, 16-12, 9-12 மற்றும் 16-13 என மிகவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.
பின்னர் பொட்ஸ்வானா அணியை 2வது போட்டியில் எதிர்கொண்ட இலங்கை அணி மீண்டும் கடினமாக போட்டியை கொடுத்து 58-54 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் காற்பகுதியில் 15-13 என இலங்கை முன்னிலை வகித்த போதும், முதல் பாதியில் 29-25 என பொட்ஸ்வானா அணி முன்னிலையை பெற்றுக்கொண்டது.
மூன்றாவது காற்பகுதியில் பொட்ஸ்வானா அணி 44-38 என்ற 6 புள்ளிகள் முன்னிலையை பெற்றுக்கொள்ள, இறுதி காற்பகுதியை இலங்கை அணி 16-14 என கைப்பற்றியது. எவ்வாறாயினும் முழுநேரத்தில் 58-54 என பொட்ஸ்வானா அணி வெற்றியை தமதாக்கியது.
சர்வதேச வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கை அணி 15வது இடத்தையும், பொட்ஸ்வாான அணி 24வது இடத்தையும் பிடித்துள்ள போதும், பொட்ஸ்வானா விளையாடும் ஆபிரிக்கா கண்டத்தில் பல சவாலான அணிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது