NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாகப்பட்டினம் – திருகோணமலைக்கு இடையில் எண்ணெய் குழாய் இணைப்பு!

நாகப்பட்டினத்துக்கும் திருகோணமலைக்கும் இடையில் பல தயாரிப்பு எண்ணெய் குழாய்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர்,

இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு நான் நேற்று (08) இந்தியன் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினேன்.

இதன்போது, நாகப்பட்டினம் – திருகோணமலை ஆகியவற்றை இணைக்கும் எண்ணெய் குழாய் அமைப்பு தொடர்பான IOC மூலமான இந்திய அரசின் முன்மொழிவு குறித்து விவாதித்தோம்.

பொறிமுறையை முடிவு செய்ய தொழில்நுட்ப ஆய்வுகள், தேவை சந்தை பகுப்பாய்வு, நிதி பகுப்பாய்வு மற்றும் வணிக மாதிரிகள் நடத்தப்படும்.

திருகோணமலை எண்ணெய் தொட்டி பண்ணை, இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் (CPSTL) லங்கா IOCயின் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் கூட்டு முயற்சியின் கீழ் முதலீடுகள் மற்றும் திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்.

இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் அழைப்பின் பேரில் பெப்ரவரி 6-7 தேதிகளில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வாரத்தின் 2 ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்தியா சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது, இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரியுடன் நடத்தப்பட்ட இருதரப்பு சந்திப்புகளில், இந்திய அரசின் உதவியுடன் நடைபெற்று வரும் எரிசக்தி திட்டங்கள், இந்திய முதலீடுகள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்த எரிசக்தி கொள்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம், எண்ணெய் குழாய் இணைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, லங்கா IOCசெயல்பாடுகள், திருகோணமலை தொட்டி பண்ணை மேம்பாடு மற்றும் நிலையான ஆற்றல் உற்பத்தி திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்திய எண்ணெய் நிறுவனம், லங்கா IOC., இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்குபற்றியதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இந்த விஜயத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் மற்றும் இலங்கை பெற்றோலிய அதிபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share:

Related Articles