(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தனியார் பஸ்களுக்கு 140 வீதி அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்தால் நாடு தழுவிய ரீதியில் பஸ் பணிப்புறக்கணிப்பு நடத்தப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இயங்கும் பஸ்களில் நாளாந்தம் சுமார் 1000 பஸ்கள் கால அட்டவணையின்றி புறப்பட்டு வருவதாகவும் இதனை மீறி, புதிய வீதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பஸ்களை அட்டவணைப்படி இயக்குவதன் மூலம் பயணிகளுக்கு சிரமமில்லாத போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முடியும் என்றும், புதிதாக 140 வீதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல கோடி ரூபாய் இலாபம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பஸ்களுக்கு 140 வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முயற்சியை திரும்பப்பெற்றால், தற்போதைய பஸ் கட்டணத்தை 10 சதவீதத்தால் குறைக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கு அனைத்து பஸ் சங்கங்களும் இணங்குவதாகவும் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.