நாட்டில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி அதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம் என பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் இருக்க நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எனவே இந்த விடயத்தில் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் பதில் பொலிஸ் மா அதிபர் கோரியுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தினுள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கனேமுல்ல சஞ்சீவ நேற்று முற்பகல் வழக்கொன்றுக்காக அழைத்துவரப்பட்டு சாட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
சட்டத்தரணி போன்று வேடமிட்டு நீதிமன்றுக்குள் இருந்த சந்தேக நபர் ஒருவரே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற பதில் பொலிஸ் மா அதிபர் அங்கு நிலைமையையும் கேட்டறிந்து கொண்டதோடு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.