NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் டெங்கு நோய் தீவிரம் – நோய் பரவலை தடுக்கும் வழிவகைகள்!

நாட்டில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதால், அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் சேனக கமகே கருத்து வெளியிட்டுள்ளார்.

டெங்கு நுளம்புகள் பெரும்பாலும் இருளான இடங்களில் இருந்தே பரவத் தொடங்குவதாகவும் அவ்வாறான இடங்கள் சூரிய ஒளியை நன்கு பெறும் சூழலை உருவாக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

500 மில்லி தண்ணீரில் 5 சொட்டு சிட்ரஸ் எண்ணெய் மற்றும் கராம்பு எண்ணெய் கலந்து வீடுகள் மற்றும் சேவை நிறுவனங்களில் தெளிப்பதன் மூலம் நுளம்புகளை கட்டுப்படுத்தலாம் என்றார்.

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதன் மூலம் டெங்கு நோய் பரவும் அபாயத்தைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டிய அவர், சமச்சீர் உணவு உட்கொள்வதன் மூலமும், வேப்பிலை, குங்குமப்பூ, கொய்யாப்பழம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமும், இஞ்சி, கொத்தமல்லி, பப்பாளி போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், தகுதி வாய்ந்த மருத்துவரிடம் தேவையான சிகிச்சை பெறுவது அவசியம் என்றும், நோயின் ஆரம்ப நிலையிலேயே தேவையான மருத்துவ சிகிச்சை பெறாததே உயிரிழப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்றும் கூறினார்.

இதேவேளை,4 வகையான டெங்கு வைரஸ்கள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக ஒருவர் ஒரு தடவைக்கு மேல் இந்த நோயினால் பாதிக்கப்படலாம் எனவும், இந்த நோய்க்கான தடுப்பூசி அல்லது மருந்து எதுவும் இல்லை எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரணு உயிரியல் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles