நாட்டுக்குரிய கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும் எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ். அல்லைப்பிட்டிய பகுதியில் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், மீனவர்கள் இளைப்பாறுவதற்கு உரிய வசதிகள், நங்கூரமிடும் ஏற்பாடுகள் குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை, ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
அத்துடன், இலங்கையின் கடல்வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும் எனவும், அதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.