NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நானுஓயாவில் சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு கடூழிய சிறை!

நானு ஓயா பிரதேசத்தில் பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 52 வயதுடைய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானு ஓயா பிரதேசத்தை சேர்ந்த பாருக் மொஹமட் சாலித் என்ற நபர் அதே பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக பாடசாலை ஊடாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து குறித்த நபர் மீது நானு ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் வழக்கிற்கான தீர்ப்பு நேற்று (13) வழங்கப்பட்டது.

இதன்போது குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அதேநேரத்தில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அத்துடன் குற்றவாளி தண்டப் பணமாக 15,000 ரூபாய் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இந்த தண்டனை பணத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles