NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘நாம் 200’ – தமிழக முதலமைச்சரின் உரை புறக்கணிப்பு!

இலங்கை வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு சென்று 200 ஆண்டுகள் ஆவதை நினைவுகூரும் வகையில் அவர்கள் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளையும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பையும் பாராட்டி இலங்கையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.

மத்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்பாட்டில் ‘நாம் 200’ என்ற தலைப்பிலான இந்த நிகழ்வில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் தமிழக அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் முந்தைய நாள் வரை அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அன்றிரவு தான் அனுமதி கிடைத்தது.

மறுநாள் காலையில் நிகழ்ச்சி தொடங்கியதால் தங்கம் தென்னரசு அதில் பங்கேற்க செல்ல முடியவில்லை. இதனால் விமான டிக்கெட் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணெளி வாயிலாக வாழ்த்துரை வழங்கிய பதிவு இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்ப அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த காணொளி உரையை ஒளிபரப்ப மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்து தடை விதித்ததால் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

முதலமைச்சரின் காணொளி உரை கடைசி 2 மணி நேரத்துக்கு முன்பு வந்ததால் அதை நிகழ்ச்சியில் சேர்க்க முடியவில்லை என்று காரணம் கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய அந்த உரை தமிழகத்தில் உள்ள பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு செய்தி துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அது வெளியிடப்பட்டது.

இந்த விவகாரம் இப்போது புது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது குறித்து இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் கூறியதாவது, இலங்கையில் ‘நாம்-200’ நிகழ்ச்சி நடத்தினோம். இது மலையக தமிழர்களை கௌரவப்படுத்த நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இதற்கு பல்வேறு தரப்பினரையும் அழைத்திருந்தோம்.

அதை ஏற்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். மேலும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் ராம் மாதவ் வந்திருந்தனர்.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தோம். முக்கியமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுத்திருந்தோம்.

இதில் தமிழக அரசில் இருந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்க வருவதாக இருந்தது. ஆனால் அவர் வருவதற்கான அனுமதியில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் அவர் வருவது எங்களுக்கு ஊர்ஜிதமாகவில்லை. தங்கம் தென்னரசு வர முடியாததால் நாங்கள் கடைசி நேரத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தோம்.

இது முக்கியமான நிகழ்வு என்பதால் தமிழக அரசாங்கத்துக்கு பிரதிநிதித்துவம் செய்கிற மாதிரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கள் மக்களுக்கு ஒரு வாழ்த்து செய்தி தரும்படி கேட்டிருந்தோம்.

நாங்கள் கேட்டது கடைசி நிமிஷம் என்றாலும் கூட முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அவரது உரையை காணொலி மூலம் எங்களுக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சி 4 மணிக்கு தொடங்க இருந்த நேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை எங்களுக்கு மதியம் 2½ மணிக்கு கிடைத்தது.

இதை நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கு சில விதிமுறை உள்ளது. அந்த நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பாக எங்கள் நாட்டு ஜனாதிபதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் நீங்கள் கட்டாயம் இலங்கைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நிர்வாக பிரச்சினை காரணமாகதான் இந்த சிக்கல் ஏற்பட்டது. மற்றபடி அவரது செய்தி மக்கள் எல்லோருக்கும் சென்று சேர்ந்துள்ளது.

இது அரசு நிகழ்ச்சி என்பதால் அதற்கென்று விதிமுறைகள் உள்ளது. இலங்கை நாட்டு ஜனாதிபதி, பிரதமர், இந்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோர் வருவதால் நிகழ்ச்சி நிரலை கடைசி நேரத்தில் மாற்றினால் சிக்கல் வரும். அதனால்தான் நிகழ்ச்சி நிரலில் அவரது உரை இடம் பெறவில்லை.

இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து என்னிடம் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என இவ்வாறு அவர் கூறினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles