NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா தீர்மானம்

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் அணுசக்தி கழகமான ரோசாடோம் அமைப்பின் தலைவர் அலெக்சி லிகாசெவ் பேசும்போது, “நிலவில் சிறிய அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இது அரை மெகாவாட் மின் உற்பத்தி செய்யும். இதில் இணைந்து செயல்பட சீனாவும் இந்தியாவும் விருப்பம் தெரிவித்துள்ளன. பல சர்வதேச விண்வெளி திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்றார். இந்த செய்தியை ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸை மேற்கோள் காட்டி யூரேஷியன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2036-ம் ஆண்டுக்குள்… நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இது 2036-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யாவின் விண்வெளி முகமையான ரோஸ்காஸ்மோஸ் கடந்த மே மாதம் அறிவித்தது.

ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்துக்கு (ஐஎல்ஆர்எஸ்) தேவையான மின்சாரத்தை இந்த அணு மின் நிலையம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்து சாதனை படைத்தது. இதையடுத்து, வரும் 2040-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

மேலும் 2050-க்குள் நிலவில் ஒரு ஆராய்ச்சி மையத்தை நிறுவவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்தான் ரஷ்யாவின் அணு மின் நிலைய திட்டத்தில் இணைய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

நிலவில் அணு மின் நிலையம் அமைப்பது ஒரு சிக்கலான முயற்சியாக இருக்கும். எனினும், மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல் தானியங்கி முறையில் இந்த நிலையம் கட்டமைக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கான தொழில்நுட்ப தீர்வுகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நிலவில் ஆராய்ச்சி மையம் அமைக்க மின்சாரம் மிகவும் அவசியமாகிறது. அங்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றாலும், அங்கு 14 நாட்களுக்கு சூரிய ஒளி கிடைக்காது. எனவேதான் அணு மின் நிலையம் அமைக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. நிலவில் அணு மின் நிலையம் அமைப்பது குறித்து அமெரிக்காவின் நாசாவும் இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles