பங்களாதேஷில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், அதனை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்த நிலையில், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் நாடு முழுவதும் பரவி, வன்முறையாக வெடித்ததில் இதுவரை சுமார் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர, வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 2 நாட்களுக்கு பங்களாதேஷ் முழுவதும் பொது விடுமுறையும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களை பார்த்ததும் சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.