(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நடமாடும் வாகனத்தில் விற்கப்பட்ட பணீஸை சாப்பிட்டு, பிளேடால் தொண்டை அறுப்பட்ட நிலையில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நடமாடும் வாகனத்தில் இருந்து உணவு பொருட்களை விற்பனை செய்த வெவெல்தெனிய ஹோட்டல் ஒன்றின் சந்தேக நபரான வர்த்தகரை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
பாதிப்புக்குள்ளான நுகர்வோர் குறித்த பணீஸை வாங்கி அதில் ஒரு பகுதியை குழந்தைக்கு கொடுத்து விட்டு மீதியை தனக்கு சாப்பிட எடுத்துக்கொண்ட வேளையில், பணிஸுக்குள் இருந்த பிளேட் துண்டு, தொண்டை பகுதியில் சிக்கி, பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் இது இடம்பெற்ற போதிலும் வைத்தியசாலையில் இருந்தவரின் தீவிரத்தன்மை காரணமாக வாக்குமூலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் நீதிமன்றில் தெரிவித்தார்.
சோதனையில், பணிஸுக்குள் இறைச்சியை செருகுவதற்காக பணீஸ்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பிளேட் பணிஸின் உள்ளே இருப்பது தெரியவந்துள்ளது.