(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பல்கலைக்கழகங்க விடுதிகளில் நிகழும் சித்திரவதை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இரவு நேரங்களில் பல்கலைக்கழக விடுதிகளை சோதனையிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விடுதிகளில் பிற்பகல் 12.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவான தொல்லைகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுகளுக்கு பல்கலைக்கழக ஒழுங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறிய அவர், பல்கலைக்கழகங்களில் கொடுமைப்படுத்தல் மற்றும் சித்திரவதைகளை தடுக்க தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
துன்புறுத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க வட்ஸ்அப் இலக்கமான பின்வரும் இலக்கம் 076-5 453 454 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணுக்கும் புகார்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த எண்ணில் வரும் ஒவ்வொரு புகாரும் உடனடியாக விசாரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.