பாடசாலைகள் மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவின் தரமற்ற நிலை குறித்த பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் முறைப்பாடுகளை அடுத்து, பொது சுகாதார ஆய்வாளர்கள், நாடு முழுவதும் தீவிர சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக பொது சுகாதார ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவின் தரம் பற்றி பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ், அதிக சர்க்கரை, அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை கட்டுப்படுத்தவும், அத்துடன் நொறுக்குத் தீனிகளை அகற்றவும் பாடசாலை சிற்றுண்டியகங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்த விதிமுறைகள் இருந்தபோதிலும், அவை புறக்கணிப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, பாடசாலை மற்றும் மருத்துவமனைகளின் சிற்றுண்டியகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், அது தொடர்பில் 0112112718 என்ற எண்ணுக்கு முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.