தெற்கு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் திட்டமிட்ட குற்றச்செயல்களும் வெளிநாடுகளிலுள்ள போதைப்பொருள் கடத்தல் காரர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் ஆறு மாதங்களில் நாட்டிலிருக்கும் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,அண்மைக் காலமாக தெற்கில் பதிவாகிய அநேகமான திட்டமிடப்பட்ட குற்றங்கள், வெளிநாடுகளில் வாழும் போதைப்பொருள் கடத்தல் காரர்களால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டவையாகும்.
இலங்கையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம்.
இத்திட்டத்தின் ஊடாக 6 மாதங்களுக்குள் இலங்கையில் குற்றச் செயல்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் தற்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.
முக்கியமான மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தற்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களாவர்.
முறையான வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் பாதாள உலகக் குழுக்களில் செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் பல பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் அல்லது திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாரிடம் வழங்க மக்கள் முன்வர வேண்டும் என்றார்.