NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றத்தில் நீதி அமைச்சரின் கருத்துகளில் உள்ள உண்மை, பொய் தொடர்பில் கேள்வி!

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டமைக்காக தமிழ் மக்களின் பிரதிநிதியினால் கடும் கண்டனத்திற்கு உள்ளான நீதி அமைச்சரின் பாராளுமன்ற உரைகளின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விக்குறியான சூழ்நிலை உருவாகியுள்ளது.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பாராளுமன்றத்தில் டிசம்பர் 04 திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் அமைச்சரின் கருத்து தொடர்பில் வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

“ஒரு வழக்கு விடயத்தைப் பற்றி பேசுவது சரியல்ல என்பதை நீதி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். மிகக் கீழ்த்தரமான முறையில் அவர் பாராளுமன்றத்தில் தவறான கருத்துக்களை முன்வைத்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.”

பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் படுகொலை முயற்சி தொடர்பில் பாராளுமன்றத்தில் விளக்கமளித்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குழுவுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சம்மதித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அதே சட்டம் ஏனைய குற்றவாளிகளுக்கு பிரயோகிக்கப்படும்போது அதனை எதிர்ப்பதாக குற்றம் சுமத்தினார்.

“பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொல்ல புலம்பெயர் தமிழர்கள் ஒப்பந்தம் கொடுத்தனர். 20 லட்சம் ஒப்பந்தம். அப்போது சுமந்தரனின் மதிப்பு 20 இலட்சமா என நானும் யோசித்தேன்.


பின்னர் வடக்கில் 5 தமிழ் இளைஞர்கள் அவரைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதை அடுத்து நமது இராணுவமும் புலனாய்வுத் துறையும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு அந்தச் சம்பவத்தைத் தடுத்து அவரைக் காப்பாற்றினார்கள்.  குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது அவரைக் கொல்ல வருபவர்கள் மீது மாத்திரம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தூக்கிலிட வேண்டும். ஆனால், பிறரைக் கொன்ற குற்றவாளிகள் மீது பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டிக்கக் கூடாது என கூறுகின்றார்.”

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, கொலை முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு சவால் விடுத்திருந்தார்.

“எனவே நான் குறிப்பாகச் சொல்கிறேன், சுமந்திரன், நீங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரானவர் தானே? அதனால, உங்களை கொல்ல வந்த ஐந்து பேரையும் விடுவிக்கச் சொல்லுங்கள். அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென சொல்லுங்கள். தன்னைக் கொல்லும் விடயத்தில்   பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் நல்லது. இது அவசியமானது. இந்த நாட்டில் அப்பாவி மக்களை கொன்ற குற்றவாளிகளுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நல்லதல்ல.”

நீதி அமைச்சரின் கருத்திற்கு பதிலளித்த எம். ஏ. சுமந்திரன், கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை எனவும், அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாமென தான் குறிப்பிட்டதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

“அப்படிப்பட்டவர்களை கைது செய்தது தொடர்பாக நான் எந்த முறைப்பாட்டையும் அளிக்கவில்லை. அந்த விடயத்தில் நான் முறைப்பாட்டாளர் அல்ல. அவர்கள் கைது செய்யப்பட்டவுடனே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தினேன். அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை.”

தம்மைக் கொல்லத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் சுமந்திரன் அங்கு மேலும் தெரிவித்திருந்தார்.

“அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களை பிணையில்  விடுவிக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதன் பின்னர், சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தபோதும் கூட கூட எனது சட்டத்தரணிகள் ஊடாக இவர்களுக்கு பிணை வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை எனக் கூறி  அந்த நபர்கள் பிணையில் வெளியே உள்ளனர். எனவே, அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. தடுத்து வைக்கப்படவும் இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என நான் வெளிப்படையாகக் கூறியுள்ளேன்.” 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles