எதிர்வரும் மாதத்தில் அத்தியாவசிய வேலைகளை தவிர வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர்.
தேர்தல் பிரசார வேலைத்திட்டத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவின் மூலம் எம்.பி.க்கள் குழுவொன்று வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், அடுத்த வார பாராளுமன்றக் கூட்டங்களும் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எம்.பி.க்கள் தங்கள் கிராமங்களில் தங்கி தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்களிக்க வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சாரக் கூட்டங்கள் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.