NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு காருடன்; மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருவதனால் அவருக்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீரவிடம் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வு நேற்று இடம்பெற்றது. இந்த செயலமர்வின் இடைநடுவே அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

தான் தெரிந்து அந்த ஆசனத்தில் அமரவில்லை என்றும், அது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனமென தனக்குத் தெரியாது எனவும், அந்த ஆசனத்தில் அமருவதால் சிக்கல் ஏற்படுமென்றும் தான் அறிந்திருக்கவில்லை என்றும் கூறிய அர்ச்சுனா எம்.பி, அது துரதிஷ்டவசமாக இடம்பெற்ற ஒரு நிகழ்வு என்பதால், அதற்காகத் தான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிவதாக தமது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி கூடிய 10வது பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வில் பங்கேற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்த்திருந்தார். இதன்போது பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வேறு ஆசனமொன்றில் அமருமாறும் அந்த ஆசனம் எதிர்க்கட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்டதெனவும் கூறியிருந்தனர். அதற்கு அர்ச்சுனா எம்.பி மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles