(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பிக்குகளின் ஒழுக்காற்று மற்றும் மதத்திற்கு எதிரான செயற்பாடுகளை கையாள்வதற்காக பிக்குகள் சொற்பொழிவு தொடர்பான சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்ற அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பிக்குகள் தொடர்பில் ஒழுக்கக்கேடான செயற்பாடுகள் பல பதிவாகி வருவதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்தின் தலையீடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மத வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இந்த பிக்கு சொற்பொழிவு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டமூலத்தின் இறுதி வரைபு மகாநாயக்கர்களின் அவதானத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும், பீடாதிபதிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர், அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.