NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு!

இந்நிலையில், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதிப்பதாக மீண்டும் அறிவித்துள்ளது.

புகையிரத சேவையை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பின்போதே அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டாா்.

குறித்த அறிவித்தலை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பல மாதங்களாக புகையிரத சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாததன் காரணமாக நேற்று பிற்பகல் முதல் புகையிரத திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.

இருப்பினும் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின் பின்னர் போராட்டத்தை கைவிட்டதாக புகையிரத தொழிற்சங்கங்கள் நேற்று மாலை அறிவித்திருந்தன.

இந்நிலையில், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதிப்பதாக மீண்டும் அறிவித்திருந்தது.

புகையிரத தொழிற்சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று காலை முதல் அலுவல ரயில்கள் உட்பட மொத்தம் 36 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles